மோகனின் எண்ணங்கள்

Posts Tagged ‘பெட்ரோல்

எங்கள் வீட்டு காம்பௌண்டில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளிலும் சேர்த்து 5 பைக்குகள் உள்ளன. இரவு வீட்டு காம்பௌண்டில் தான் நிறுத்துவோம். யார் வேண்டாலும் உள்ளே வரலாம். கேட் பூட்டினாலும் பிரயோஜனம் இல்லை. காம்பௌண்ட் சுவர் தாண்டி வந்து விடலாம். இப்பொழுது எதற்கு என் வீடு பற்றி கதை சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களாக காம்பௌண்டில் உள்ள அனைத்து பைக்குகளில் இருந்தும் பெட்ரோல் இரவு நேரங்களில் திருடப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் டியுபை கழற்றி பெட்ரோலை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த பெட்ரோல் திருடர்களை எப்படி பிடிப்பது என்றும் தெரிய வில்லை. எல்லாரும் தூங்கிய பின்பு தான் வந்து தங்கள் கைவரிசைகளை காட்டுகின்றனர். இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பைக் எடுக்கும் போது மறுபடி நிரப்பி கொள்ள வேண்டியது. இப்படித்தான் அவர் பெட்ரோல் திருட்டை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

இம்மாதிரியான பெட்ரோல் திருட்டை தடுக்க பெட்ரோல் லாக் எதோ இருக்கிறதாமே, யாரேனும் உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? அது உண்மையிலேயே பெட்ரோல் திருட்டை தடுக்கிறதா, உபயோகித்தவர்கள் சொல்லுங்களேன்.

Advertisements
குறிச்சொற்கள்: ,

நான் கோவையில் பொறியியல் படிப்பு படித்துபோது கல்லூரி விடுதியில் தங்கி படித்ததில்லை. முதல் செமஸ்டர் மட்டும் கல்லூரி அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு 5 செமஸ்டர்களும் என் பாலிடெக்னிக் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தேன். 5 செமஸ்டர்களில் 4 வீடுகள் மாற்றி விட்டோம்.

அப்படி கடைசி வீட்டில் நடந்த சில நிகழ்ச்சிகள்தான் இவை:

பெட்ரோல் எரியுமா?

முன்குறிப்பு:
இப்பதிவு தற்போதைய பெட்ரோல் விலையால் நுகர்வோர்களின் வயிறெரிவதைப் பற்றி அல்ல.

அப்போது நாங்கள் 7-8 நண்பர்கள் சேர்ந்து கோவை காந்திபுரம் புதுசித்தாபுதூரில் வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

எங்களது வீடு காந்திபுரம் அருகேயிருந்ததால் என் வகுப்புத் தோழன் ஒருவன் அவனது வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு ஊருக்கு போய் விட்டான். ஊரிலிருந்து வரும்போது நேராக எங்கள் வீட்டிற்கு வந்து வண்டியை எடுத்துக்கொள்வதாக ஏற்பாடு.

பொதுவாக நாங்கள் குடியிருந்த வீட்டில் எப்போழுதும் ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அது போன்று என்னுடைய வகுப்புத் தோழர்கள் 4-5 அன்று எங்கள் வீட்டிலிருந்தார்கள். அவர்களில் ஒருத்தர் கூட அவ்வீட்டில் குடியிருந்தவர்கள் அல்ல, அதாவது அவ்வீட்டில் குடியிருந்தவர்கள் ஒருவரும் அப்போது அங்கில்லை.

என் வகுப்புத் தோழன் நிறுத்திவிட்டு போயிருந்த வண்டியிலிருந்து பெட்ரோல் கசிந்துக் கொண்டிருந்தது போலும். அதைப் பார்த்த என்னுடைய வகுப்புத் தோழர்களில் ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். பெட்ரோலைப் பற்ற வைத்தால் எரியுமா எரியாதா என்று. என்னே ஒரு ஆராய்ச்சி, அவன் அதை மற்றவர்களிடம் அதை சொல்ல அவர்களும் ஆர்வமாக பற்ற வைத்து தான் பார்ப்போமே என்று அப்பெட்ரோலைப் பற்ற வைத்து விட்டார்கள். குபீர் என்று அது பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. நல்ல வேளையாக அவ்வண்டிக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் பெட்ரோல் எரிந்து வீட்டு காம்பெளண்ட் சுவரைப் பதம் பார்த்துவிட்டது.

இதையெல்லாம் கவனித்த வீட்டுரிமையாளர் வந்து அவர்களை நன்றாக காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் கேட்ட கேள்வி “பெட்ரோலை பற்ற வைக்கிறீர்களே, இதுதான் நீங்கள் படிக்கும் லட்சணமா?”. அதற்கு அப்புறம் தான் அவர் கவனித்து இருக்கிறார், இவ்வளவு களேபரத்திலியும் ஒரு தெரிந்த முகம் கூட காணவில்லையே என்று. அதற்கு அப்புறம் வீட்டிற்கு வந்த எங்களுக்கு தனியாக பூசை விழுந்தது தனி கதை.

வீட்டை சுலபமாக கழுவி விடுவது எப்படி?

ஒரு நாள் காலையில் எங்கள் நண்பன் குளியலறை குழாயில் ஏதோ பிரச்சினை இருந்ததை சரி செய்கிறேனென்று ஏதோ செய்து அக்குழாய் உடைந்து விட்டது. கல்லூரிக்கு செல்லும் அவசரம் மற்றும் அப்போது தண்ணீர் வராதக்காரணத்தால் அவன் அதை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான். நாங்களும் இதை பெரிய விஷயமாக கருதாமல் கல்லூரிக்கு சென்று விட்டோம். அன்று பார்த்து நான் வீட்டிற்கு முதலாவதாக திரும்பினேன். வீட்டருகே வந்துப்பார்த்தால் ஒரே தண்ணீர்மயம். பக்கமே வீட்டுரிமையாளர் கோவமாக நின்றுக் கொண்டிருந்தார்.

விஷயமிதுதான். நாங்கள் கல்லூரிக்கு சென்றப்பிறகு தண்ணீர் வந்துள்ளது. வீட்டுரிமையாளரும் தண்ணீர் ஏற்ற மோட்டர் போட்டு விட்டிருக்கிறார். எங்கள் வீட்டிலிருந்த குழாய் உடைந்திருந்ததால் தண்ணீர் முழுவதும் வெளியேறி அது எங்கள் வீட்டை நன்றாக கழுவிவிட்டு பின்பு அப்படியும் அடங்காமல் வீட்டின் வெளிபுறத்தையும் கழுவிவிட்டிருக்கிறது. அது புரியாமல் வீட்டுரிமையாளர் என்னைப் பிடித்து நன்றாக திட்டிவிட்டார். நானும் வேறுவழியின்றி அதை எல்லாம் கேட்டுக் கொண்டேன். பிறகு நான் அந்த ஆத்திரத்தையெல்லாம் இத்தனைக்கும் காரணமான நண்பன் வந்தப்பிறகு அவனைத்திட்டி தீர்த்துக்கொண்டேன்.


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூலை 2018
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements