மோகனின் எண்ணங்கள்

Archive for the ‘அனுபவங்கள்’ Category

எங்கள் வீட்டு காம்பௌண்டில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளிலும் சேர்த்து 5 பைக்குகள் உள்ளன. இரவு வீட்டு காம்பௌண்டில் தான் நிறுத்துவோம். யார் வேண்டாலும் உள்ளே வரலாம். கேட் பூட்டினாலும் பிரயோஜனம் இல்லை. காம்பௌண்ட் சுவர் தாண்டி வந்து விடலாம். இப்பொழுது எதற்கு என் வீடு பற்றி கதை சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களாக காம்பௌண்டில் உள்ள அனைத்து பைக்குகளில் இருந்தும் பெட்ரோல் இரவு நேரங்களில் திருடப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் டியுபை கழற்றி பெட்ரோலை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த பெட்ரோல் திருடர்களை எப்படி பிடிப்பது என்றும் தெரிய வில்லை. எல்லாரும் தூங்கிய பின்பு தான் வந்து தங்கள் கைவரிசைகளை காட்டுகின்றனர். இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பைக் எடுக்கும் போது மறுபடி நிரப்பி கொள்ள வேண்டியது. இப்படித்தான் அவர் பெட்ரோல் திருட்டை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

இம்மாதிரியான பெட்ரோல் திருட்டை தடுக்க பெட்ரோல் லாக் எதோ இருக்கிறதாமே, யாரேனும் உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? அது உண்மையிலேயே பெட்ரோல் திருட்டை தடுக்கிறதா, உபயோகித்தவர்கள் சொல்லுங்களேன்.

Advertisements
குறிச்சொற்கள்: ,

என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).

நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு எடை தூக்கினாலும் அப்பிரிவில் வெற்றி பெற்று விடுவேன் என்று ஒரு நண்பன் (நண்பனா அவன்) உசுப்பேத்தி விடவே நானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தயாரானேன்.

முதலில் எனது நண்பன் பளுத் தூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயத்தமானான். என்ன ஆயிற்றோ தெரிய வில்லை. அவன் சரியாக பளுத் தூக்காமல் தவறி ஏடாகூடமாக கீழே போட்டு விட்டான். அதனால் அவனது தோள்பட்டை பிசகி விட்டது.  உடனே அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அப்பொழுது.

எனவே எங்கள் நண்பர்கள் பட்டாளம் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆகையால் நான் அன்று பளு தூக்க வில்லை. அனுபவம் உள்ள அவனுக்கே அன்று அக்கதி என்றால் கற்றுக்குட்டியான என் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். எனவே தான் அவனை  என்னை காப்பாற்றிய நண்பன் என்று சொன்னேன். சரிதானே? 🙂

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்: ,

இன்று நடந்த இரண்டு விஷயங்களை பற்றியே இவ்விடுகை.

முதல் விஷயம், இன்று காலை பணம் எடுக்க ATM போன போது, என்னுடைய பைக்-ஐ
“No parking” நிறுத்தி விட்டு பணம் எடுத்து விட்டு வண்டி எடுக்க போகும் போது போக்குவரத்து காவலர், ஒரு வாகனத்தோடு வந்து “No Parking” ல் இருந்த வண்டிகளை எடுத்து அவ்வாகனத்தில் ஏற்ற சொன்னார். அவர்கள் முதலில் கை வைத்தது என் வண்டியில் தான். நான் போக்குவரத்து காவலரிடம் “அய்யா தெரியாமல் நிறுத்தி விட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று மன்றாடி அவரை சமாதானப்படுத்தி  எப்படியோ என் வண்டியை எடுத்துக் கொண்டு விவேக் பாஷையில் எஸ்கேப்ப்ப்ப். இத்தனைக்கும் என் வண்டி தமிழ்நாடு பதிவு எண் உடையது. அக்காவலர் வாழ்க. தமிழ்நாட்டை சேர்ந்த வண்டிகள் என்றால் கர்நாடகா போக்குவரத்து காவலர்கள் ஒரு பாசத்துடன் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணம் இப்போது எனக்கு சற்று மாறி உள்ளது. (ஒரு வேலை அக்காவலர் தமிழகத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாமோ)

இரண்டாவது என்னுடைய பிஎஸ்என்எல்  தொலைபேசி உண்மையிலே தொல்லை பேசியாக தான் இருக்கிறது. அதிலுள்ள  பிரோட்பேண்ட் இணைப்பு திருப்திகரமாக இல்லை என்பதால் அந்த இணைப்பை நீக்க என்ன வழி என்று கேட்டால் அதற்கு ஒரு கடிதம் கமர்சியல் ஆபிசர்-டம் கொடுக்க வேண்டுமாம். அக்கடிதம் எழுதி ஒரு 25 நிமிடம் வரிசையில் நின்று கொடுத்து விட்டு வந்துள்ளேன். இதற்கு சுலபமான வழியே இல்லையா? இதோடு ஏர்டெல் சேவையை ஒப்பிட்டால் ஏர்டெல் சேவை பிரமாதமோ பிரமாதம். பிஎஸ்என்எல் மாற வாய்ப்பே இல்லையா?

குறிச்சொற்கள்: , , ,

சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பள்ளியைத் தாண்டி செல்ல வேண்டியதிருந்தது. அச்சமயம் பள்ளி விடும் நேரம் ஆதலால் காவலர் வாகனங்களை நிறுத்தி பள்ளி மாணாக்கர்கள் சாலையை கடக்க உதவிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் வாகன ஓட்டிகள் பொறுமை இழக்க ஆரம்பித்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் சற்று தொலைவில் தான் சிக்னல், அதுலேயும் சிவப்பு விளக்கு தான் எரிந்துக் கொண்டிருந்தது. எனவே அங்கே போயும் நிற்க வேண்டியதாய் தான் இருக்கும். ஆனாலும் இப்பள்ளி மாணாக்கர்களுக்காக சிறிது நேரம் இவர்களால் ஏன் பொறுமையாய் இருக்க  முடியவில்லை? இன்னொருவரோ காவலர் நிற்கச் சொல்லியும் அவரைத் தாண்டி அவர் பாட்டுக்கு போய் விட்டார். இதுவே அவர்கள் குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்திருப்பார்களேயானால் இம்மாதிரி செய்பவர்களை இவர்களே எப்படித் திட்டி தீர்த்திருப்பார்கள்?

சரி, இது தான் இப்படியென்றால் மெத்த படித்தவர்கள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். எங்கள் அலுவலகத்தில் அனைவரும் லிஃப்ட் உபயோகப்படுத்துவது வழக்கம். பொதுவாக லிஃப்டில் இருந்து வெளியே வருபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்னரே லிஃப்டிற்குள் போக வேண்டியவர்கள் நுழைய வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயம் அப்படி நடக்காது. லிஃப்ட் ஒரு தளம் வந்து நின்று லிஃப்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே நின்றிருப்பவர்கள் வழியை மறித்துக் கொண்டி நிற்பார்கள். சில சமயம் கவலையே படாமல் அவர்கள் பாட்டிற்கு உள்ளே நுழைந்து விடுவர். இப்படிப் பட்ட பிரச்சினைகளைப் பார்த்து எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு லிஃப்ட் முன்பும் வைத்துள்ள அறிவிப்புத் தான் இது.

லிஃப்ட் அறிவிப்பு

லிஃப்ட் அறிவிப்பு

குறிச்சொற்கள்: ,

சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது

என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.

எப்பொழுதாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரு பிவிஆர், ஃபன் திரையரங்ககிளிற்க்கு போவதுண்டு. அங்கு டிக்கெட் விலை உண்மையாகவே யானை விலை, குதிரை விலை (யானை விலை சரி, அது என்ன குதிரை விலை, இச்சொற்றொடர் எப்படி/எப்பொழுது வந்தது?). திரையரங்கினுள் பட இடைவேளைக்கு சற்று முன்பு திரையரங்க உணவகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்டர் எடுக்க வருவார்கள்.

இது எனது சிறுவயது திரையரங்கு சம்பந்தப்பட்ட நினைவுகளை கொண்டு வருகிறது. அந்த கொட்டாய்களில் இடைவேளை சமயம் கைமுறுக்கு, தட்டுவடை இன்னபிற சாப்பிடும் சமாச்சாரங்களை திரையரங்கினுள் விற்பார்கள். அப்போது அவர்களுக்கு சீருடை ஏதும் இல்லை.

அதைத்தான் இப்போது பிவிஆர், ஃபன் மற்றும் பல மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் நன்றாக சீருடை அணிந்த யுவதிகளும் இளைஞர்களும் செய்கிறார்கள். இவர்கள் பர்கர், நாசோஸ் என்று விற்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்! 🙂

என்னே கால மாற்றம்?

நான் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது (1994) படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு மடம் சார்பாக 3-4 மாவட்டங்களிடையே விவேகானந்தரைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் பட்டது. நான் அதில் எனது பள்ளி சார்பாக கலந்துக் கொண்டேன். எனது பள்ளி ஆசிரியர்களும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவினர். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றிருப்பதாக எங்கள் பள்ளிக்கு தகவல் வந்தது. ஜனவரி மாதம் கோவையில் உள்ள அம்மடத்தில் நடைபெறும் ஒரு பூஜை விழா சமயம் அங்கே வந்து பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். பரிசை வழங்க இருந்தவர் முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் என்றும் ஒரு தகவல். ஆனால் சில காரணங்களால் நேரில் போக முடியாத சூழ்நிலை.

இதை எனது தமிழ் ஆசிரியரிடம் சொன்னப்போது அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார். முன்னாள் ஆளுநர் கையால் பரிசு வாங்கும் வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று கேட்டு என்னை நேரில் சென்றே பரிசை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் அப்பாவிடம் இதை எடுத்துச் சொல்ல அவரும் சரி, நாம் கோவை செல்லலாம் என்று ஒத்துக் கொண்டார். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அப்பாவும் நானும் கோவைக்கு பேருந்தில் கிளம்பினோம்.

அடுத்த நாள் தான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அம்மடத்திலியே அன்று இரவு தங்கினோம். அடுத்த நாள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக காத்திருந்தோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆனால் என்னை மட்டும் கூப்பிடவில்லை. எனது அப்பா சென்று விழா நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஏதோ ஒரு பட்டியலை பார்த்து விட்டு, “சாரி சார், இது தவறி விட்டது” என்று சொல்லி விட்டனர். அப்பா அதற்கு “ஆங்கிலத்தில் சாரி ஒரு கெட்ட வார்த்தை” என்று சொல்லி அவர்களை திட்டி விட்டு பரிசை அவர்களிடமே வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

குறிப்பு: இது என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

குறிச்சொற்கள்: ,

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூலை 2018
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements